puvi

அன்பு ஒரே வானம் ஒரே பூமி ஒரே இறைவன் எனச் சொல்ல ஒன்றே குலம் எனும் ஆத்ம ஜீவனோடு அகத்திலும் அன்பே குடியிருக்கும்!

ஞாயிறு, 28 நவம்பர், 2010

அம்மா…! நீ எங்கே சென்றாய்?

அம்மா..!
அன்று…
வளைந்த புருவம்
வடிவாய் வளரவில்லை என
தினம்தினம் எண்ணெய் தேய்த்து
எடுப்பாய் வளர செய்து
அழகு பார்த்தாய்!
இன்று…!
புருவத்தை பற்றி பலர் கேட்கும் போதும்
என் அம்மா தான் காரணம்
என்று பெருமிதம் கொள்வதை
கேட்க மனமின்றி…
நீ எங்கே சென்றாய்?
அன்று…
உன் தேவைகளை குறைத்து
பண்டிகைக்கு இரண்டென
புத்தாடை வாங்கி தந்து
பூரிக்க வைத்தாயே
இன்று…!
உன் ஆசை மகள்
கைநிறைய சம்பாரித்தும்
கை வளை பூட்டவோ
கல் வைத்து ஆழி இடவோ
உன் கை நீட்ட மறுத்து..
நீ எங்கே சென்றாய்?
அன்று…
பிறந்த நாள் என்றால்
உன் முதல் வாழ்த்தோடு ,
சோம்பல் முறித்து எழுந்து
பின் யாரோசிலர் வாழ்த்துக்காக
காத்திருந்தேன்
இன்று…
வாய்நிறைய வாழ்த்த
ஆயிரமாயிரமாய் இருந்தாலும்
உன் வாய் மலர்ந்த
ஓர் அன்பு வார்த்தைக்கு
ஏங்கும் என்னை அலைகழித்து…
நீ எங்கே சென்றாய்?
அன்று…
கோவிலுக்கு சென்று
உனக்காக மட்டும் தானே
வேண்டி வந்தேன்…
இன்று …
கோவிலுக்கு செல்லாததற்கு
காரணம் கேட்பவர்க்கு
என்ன விடை கூறுவது
என்று கூறாமல்
விடைப்பெற்று
நீ எங்கே சென்றாய்? அதிர்ந்து போனேன்……
‘அம்மா பாடல்’ ஒலித்து
அன்று…
நோயுற்றபோது
கசாயம் போட்டு..
கம்பளிக்குள் அடைக்கலம் புகுத்தி..
வேளைக்கு மருந்து தந்து
சர்வ காலமும் என்னையே
நினைத்திருந்தாய்…
இன்று…
கண்ணீரோடு கட்டிலில் கிடந்து..
கலவர மனதோடு
காய்ச்சலுக்கு மருந்து தேடி
உன்னையே நினைத்திருந்தபோதும் …
அருகில் வந்து
ஆராரோ  பாடாமல்…
நீ எங்கே சென்றாய்?
அன்று…
விடுதியில் விட்டு
சென்ற போது-ஒரு துளி
சிந்திய போதே..
உயிர் வலியால் துடிதுடித்தாய்…
இன்று…
கரைபுரண்டோடும் என்
கண்ணீரை துடைக்கவில்லை.
என்றாலும்……!
???
???
???
இதே அறையில்..
எங்கோ நின்று கொண்டு..
கன்னம் தொட்டு
கண்ணீரை துடைக்க முடியாமல்…
தவிக்கும் கதறும் உன்னை
இனி நான் கேட்கமாட்டேன்…
நீ எங்கே சென்றாய் என…
அம்மா…
நீ என்னுடனே இருக்கிறாய்…
நீ எனதாகவே இருப்பாய்….
                                                                      By-puvi